சென்னையில் மெட்ரோ ரயில் பாதைகளின் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையேயான 10கி.மீ தூரப்பணியை இன்னும் ஒரு வாரத்தில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்க இருப்பதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான 10 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில்பாதை பணிகள் முற்றிலும் முடிவடைந்து தற்போது அதிவேக சோதனைகள் நடைபெற்று வருகிறது. இந்த ரயில்பாதையில் ரயிலை பயணிகளுக்காக இயக்குவதற்கு பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ஒரு வாரத்தில் சான்றிதழை தர உள்ளதாகவும், அதன்பின்னர் சென்னை மக்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்த மெட்ரோ ரயில்பாதை மத்திய, மாநில அரசுகளின் ஒப்புதலை பெற்று பயணிகளுக்கான சேவை தொடங்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு ஆணையர் சான்றிதழ் வழங்கிய பின்னர் ஓரிரு நாட்களில் டிக்கெட் கட்டணத்தையும் மாநில அரசு இறுதி செய்து அறிவிக்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். கோயம்பேடு தொடங்கி கோயம்பேடு பஸ் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுதாங்கல், ஆலந்தூர் வரை 7 ரயில் நிலையங்கள் உள்ளதாகவும், இவற்றின் பணிகள் முற்றிலும் நிறைவடைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.