தமிழகத்தில் செவிலியர் பட்டயப் படிப்புக்காக 23 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த செவிலியர் பள்ளிகள் அனைத்தும் குறைந்தபட்சம் 300 படுக்கை வசதி கொண்ட மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவமனையைச் சார்ந்து இயங்க வேண்டும் என்பது முக்கிய விதிமுறைகளில் ஒன்று. இவ்வகை செவிலியர் பள்ளியில் 60 முதல் 100 மாணவர்கள் வரை சேர்க்க அனுமதி உண்டு. 100க்கும் அதிகமான மாணவர்களை சேர்க்க அனுமதி இல்லை.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி, திருச்சி மருத்துவக் கல்லூரி, திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி ஆகிய செவிலியர் பள்ளிகளில் 175க்கும் அதிகமான மாணவர்களும், மற்ற ஒருசில செவிலியர் பள்ளிகளில் 100க்கும் குறைவான மாணவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

எனவே ஒவ்வொரு பள்ளியிலும் 100 மாணவர்களை சமமாம பிரிக்கும் வகையில் கவுன்சிலிங் நடைபெற்றது. இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் எஸ்.கீதாலட்சுமி கூறியதாவது:

தமிழக செவிலியர் பள்ளிகளில் உள்ள இடங்களை அனைத்துப் பள்ளிகளுக்கும் 100 என சமமாகப் பிரித்துள்ளோம். இதனால் செவிலியர் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான இடங்கள் குறையவில்லை. குறைவாகக் காணப்பட்ட பள்ளிகளில் இடங்களை அதிகரித்ததற்கேற்ப கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் செவிலியர் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கை தற்போது 450 ஆக உள்ளது. அவற்றில் 80 இடங்கள் காலியாக உள்ளன. மேலும் 150 புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என செவிலியர் பள்ளி முதல்வர்கள், செவிலியர் ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

English Summary: 100 Male Student Seats made available in all Nurse Colleges.