ஒரே நேரத்தில் 351 நூல்கள் வெளியிட்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் கின்னஸ் சாதனை செய்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இயங்கி வரும் தமிழியல் துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை மற்றும் சென்னையில் உள்ள கலைஞன் பதிப்பகம் ஆகியவை இணைந்து பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை சமீபத்தில் நடத்தியது. இதில், மறைந்த மற்றும் வாழும் தமிழறிஞர்களின் வாழ்வும் பணியும் என தமிழறிஞர்களால் எழுதப்பட்ட 351 நூல்களை ஒரே நேரத்தில் வெளியிட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.

பல்கலைக்கழக துணைவேந்தர் மணியன் தலைமையில் இந்த 351 நூல்களும் வெளியிடப்பட்டது. பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதன்மையர் திருவள்ளுவன், தமிழியல் துறை தலைவர் முனைவர் அரங்க.பாரி, உலக தமிழ் ஆராய்ச்சி மன்ற தலைவர் மாரிமுத்து, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை தலைவர் மோகன்தாஸ், சென்னை பல்கலைக்கழக தமிழ் பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் ஆகியோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுரேஷ்குமார் இந்த விழாவில் பங்கேற்று பேசியபோது, “ஒரு நூல் வெளியீடு என்பது ஒரு குழந்தை பிறப்பதற்கு சமம். இங்கு ஒரே நேரத்தில் 351 தமிழ் குழந்தைகள் பிறந்துள்ளதாக கருதுகிறேன். தற்போது நிலவும் புதுப்புது ஆங்கில வார்த்தைகளுக்கு இணையாக தமிழ் சொற்களை தமிழறிஞர்கள் கண்டுபிடித்து பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் மகன் மன்னர்மன்னன், சேவை.சண்முகநாதன், பேராசிரியர் ஆறுமுகநாதன், கலைஞன் பதிப்பகம் நந்தன் மாசிலாமணி ஆகிய 4 பேர் கவுரவிக்கப்பட்டனர்.

English Summary: More than 350 books were released in one Time at Chidambaram Annamalai University.