உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் கல்விக்கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாணவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களின் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்றும் இச்சலுகையைப் பெற, பெற்றோரின் வருமானச் சான்றிதழை அக்டோபர் 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவின் பேரில், மாணவர்களுக்கு வங்கிகள் கல்விக் கடன்களை வழங்கி வருகின்றன. 2008ஆம் ஆண்டு 13 லட்சம் மாணவர்களும், 2014ஆம் ஆண்டு 25.60 லட்சம் மாணவர்களும் கல்விக்கடன் பெற்றுள்ளனர். இதற்கிடையில், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.4.5 லட்சத்துக்குள் இருந்தால், அவர்களது பிள்ளைகள் பெறும் கல்விக் கடனுக்கு 100 சதவீத வட்டி மானியம் வழங்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த 2009ஆம் ஆண்டு அறிவித்தது. மேலும், கடன் தொகையை திருப்பிச் செலுத்த மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்து ஒருவருடம் வரை அவகாசம் அளிக்கப்பட்டது. படிப்புக் காலம் மற்றும் இந்த ஓராண்டு காலம் வரை மட்டுமே வட்டிக்கு 100 சதவீத மானியம் அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்றோரின் வருமானம் குறித்து தாசில்தார் அளிக்கும் சான்றிதழை சமர்ப்பித்து, இச்சலுகையைப் பெறலாம். 2009 முதல் 2014 வரை வழங்கப்பட்ட கல்விக் கடனுக்கு இச்சலுகையைப் பெற மாணவர்கள் வருமானச் சான்றிதழை சமர்ப்பிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
கல்விக் கடனுக்கான மானியத் தொகையை அனைத்து வங்கிகளுக்கும் அளிப்பதற்காக கனரா வங்கியை தொடர்பு வங்கியாக மத்திய அரசு நியமித்துள்ளது. கனரா வங்கி அதிகாரிகள் இதுகுறித்து கூறியபோது, ‘‘கல்விக் கடனுக்கான தொடர்பு வங்கியாக கனரா வங்கி நியமிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்விக் கடனுக்கான வட்டி மானியத்தை மற்ற வங்கிகள் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், பல வங்கிகள் பெறாமல் உள்ளன. இத்தொகையை பெற்றுக்கொள்ள வங்கிகளுக்கு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு 2009-10ஆம் ஆண்டில் 43.85 சதவீத மானியமும், 2013-14ஆம் ஆண்டில் 16.63 சதவீத மானியமும் வழங்கியுள்ளது’’ என்று கூறினர்.
English Summary : Date extended till October 6 for 100% subsidy for educational loan interest.