சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தந்து கருத்தை தைரியமாக, ஆணித்தரமாக பதிவு செய்யும் பழக்கம் உடையவர். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் நீதிபதிகள் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் நீதிமன்றங்கள் கெட்டு போனால் ஒரு நாடு உருப்படாது என தைரியமாக தனது கருத்தை பதிவு செய்தார். அவருடைய கருத்துக்கு பல முன்னணி அரசியல் தலைவர்கள் பாராட்டியுள்ளனர்.

முன்னாள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.எஸ்.கைலாசம் அவர்களின் 100வது பிறந்த நாள் விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியதாவது: நீதிமன்றங்களை நம்பித்தான் நாடு உள்ளது. அரசியல்வாதிகள் கெட்டுப்போனால் நாடு உருப்படும், மக்கள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும், ஆனால் நீதிமன்றம் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது. நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியீட்டு விழாவில், முதல் தபால் தலையை பெறுவதற்கு, அவருடைய குடும்பத்தில் அதிகம் நெருக்கமானவன் என்ற தகுதியை விட எனக்கு வேறு தகுதி இல்லை.

அவருடைய மனைவி சவுந்திரா கைலாசம் ஆன்மிகத்தில் பெரும் புலமை பெற்றவர். அவரிடம் எப்படி இதனை பெற்றீர்கள்? என்று ஒரு முறை கேட்டதற்கு, எனக்கு குரு என்னுடைய கணவர் கைலாசம் தான் என்றார். இவரே இவ்வளவு புலமை பெற்றிருக்கும் போது நீதிபதி எவ்வளவு புலமை பெற்றிருப்பார் என்று எண்ணி பார்த்து வியந்து போனேன். பொதுவாக ஞானம் என்ற நிலையை அடையும்போது நான், நீ, நாம், நாங்கள் என்ற வார்த்தைகள் அழிந்துவிடும். எனவே ஆன்மிக வழியில் நாம் ஞானத்தை பெற முயற்சிக்க வேண்டும்’ என ரஜினிகாந்த் பேசினார்.

இதே விழாவில் பேசிய கவியரசு வைரமுத்து, “நீதிமன்றம் சமூகத்தை உற்றுப் பார்ப்பது போல், சமூகமும் நீதிமன்றத்தை உற்றுப்பார்த்துக் கொண்டு இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது. நீதிபதி ஒருவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நல்லபெயரை பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு விலைபோவதை ஏற்க முடியவில்லை. நீதித்துறை, காவல்துறை, கல்வித்துறை, மருத்துவத்துறை ஆகிய 4 துறைகளும் களங்கம் ஏற்படாமல் இருந்தால் தான் சமூகம் மேம்படும்.

English Summary : Rajinikanth mentions in his speech that Country will spoil if Court fails to do their work.