வரும் 2016-2017ஆம் கல்வியாண்டுக்கான 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன மேலாண் இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன் கூறியுள்ளார். இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து மேலும் கூறியதாவது:
வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்கும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கான 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு பள்ளிகளுக்கும், தனியாக விண்ணப்பித்துப் பெறும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு புத்தகங்களைப் பெறுவதற்கு 10,900 தனியார் பள்ளிகள் இதுவரை பதிவு செய்துள்ளன. அத்துடன் அரசுப் பள்ளிகளுக்கு, வழங்கப்பட வேண்டிய புத்தகங்கள் அந்தந்தக் கல்வி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 58 லட்சம் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
மாணவர்கள் தங்களின் தாலுகா அலுவலகங்களில் அரசு கேபிள் டிவி பொது இ-சேவை மையங்களிலும், சென்னையிலுள்ள விற்பனை மையத்திலும் புத்தகங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற விரும்பும் மாணவர்கள் www.textbookcorp.in என்ற இணையதளத்தில் புத்தகங்களின் இருப்பை அறிந்துகொண்டு வேண்டிய புத்தகங்களைப் பதிவு செய்து, பணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். பணம் செலுத்திய 72 மணி நேரத்துக்குள் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறினார்.
English Summary : 10th and 12th books distributed online.