டி.என்.பி.எஸ்.சி கடந்த நவம்பர் மாதம் நடத்திய குரூப் 1 தேர்வின் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட மெயின் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

துணை ஆட்சியர் (ஆர்டிஓ), டிஎஸ்பி, வணிக வரி உதவி ஆணையர், மாவட்ட பதிவாளர் ஆகிய பதவிகளில் 74 காலியிடங்களை நிரப்ப குரூப்-1 முதல்நிலைத்தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய இந்தத் தேர்வை 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். இந்நிலையில், முதல்நிலைத்தேர்வு முடிவு டி.என்.பி.எஸ்.சியின் அதிகாரபூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் நேற்று மாலை வெளியிடப்பட்டது. மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்களையும் இந்த இணையதளத்திலேயே பார்க்கலாம்.

வெறும் 74 காலியிடங்களுக்கு இரண்டு லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் ஒரு காலியிடத்துக்கு 50 பேர் என்ற விகிதாச்சார அடிப்படையில் 4,033-க்கும் மேற்பட்டவர்கள் மெயின் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல்நிலைத்தேர்வில் ஒரே கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்களும் மெயின் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெயின் தேர்வு ஜூலை மாதம் 29, 30, 31-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்றும் டி.என்.பி.எஸ்.சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா அறிவித்துள்ளார்.

English Summary : TNPSC group-1 prelim’s results announced. Main exam will be conducted on July.