தமிழக சட்டமன்றத்திற்கு வரும் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் 100% வாக்குப்பதிவு நடைபெறவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்க்க சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டது. அடையாறில் உள்ள ஆந்திர மகிளா சபா பராமரிப்பில் செயல்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் 18 வயது நிரம்பிய மாற்றுத் திறனாளிகள் 18 பேருக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் டாக்டர் பி. சந்தரமோகன் கலந்துகொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.

சென்னை மாவட்டத்தில் 10 கல்வி நிறுவனங்களில் 1,428 மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். அதில், 1,196 நபர்கள் 18 வயதுக்கும் குறைவானவர்கள், 232 பேர் 18 வயது நிரம்பியவர்கள். அதில் 69 மாணவர்களுக்கு ஏற்கெனவே வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 109 மாணவர்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டங்களில் வாக்கு பதியப்பட்டுள்ளது. இதில், 55 மாணவர்களிடம் சென்னை பெருநகர மாநகராட்சி உதவி வாக்குப் பதிவு அலுவலர்கள் நேரில் சென்று படிவம் 6 வழங்கி பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மாற்றுத் திறனாளிகள் எளிதில் சென்று வாக்களிக்க ஏதுவாக சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 16 சட்டப்ரவை தொகுதியில் உள்ள 3,770 வாக்குச்சாவடிகளில், 891 வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கும் வாக்களிக்க வசதியாக சக்கர நாற்காலி வண்டிகள் வாங்கப்பட உள்ளது. இவர்கள் வாக்களிக்க உதவியாக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் ஒரு நாட்டுநலப்பணித் திட்ட மாணவர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

சென்னை மாவட்டத்தில் முதல்முதலாக மாற்றுத் திறனாளிகள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் இரு இடங்களில் சிறப்பு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் இரட்டைக்குழித் தெருவில் ஒரு சிறப்பு வாக்குச்சாவடியும், வில்லிவாக்கம் தொகுதி அம்மன் குட்டை பலராமபுரத்தில் ஒரு சிறப்பு வாக்குச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary : Wheelchair facility at 891 polling stations for disabilities to vote.