ஒரு காலத்தில் சென்னை நகரின் அழகை மெருக்கூட்டி படகு போக்குவரத்து நடந்த கூவம் நதி தற்போது சாக்கடையின் மறு உருவமாகி மாறி நகரின் அழகையே கெடுத்து வருகிறது. கூவம் நதியை தூய்மைப்படுத்த வேண்டும் என பல சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளின்படி தற்போது கூவம் நதியை தூய்மைப்படுத்தும் பணி தற்போது முழு வீச்சில் தொடங்கவுள்ளது. முதல்கட்டமாக சென்னை மாநகராட்சி, நவீன மற்றும் கவர்ச்சிகரமான நடைபாதைகளையும், பூங்காக்களையும் உருவாக்கும் எண்ணத்தில், கூவம் மற்றும் அதையொட்டிய குடிசைப் பகுதிகளை அகற்றத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
கூவம் நதிக்கரையில் ஒன்பது பூங்காக்களையும், நடைபாதைகளையும் உருவாக்குவதற்காக, 35 குடிசைப்பகுதிகளில் இருக்கும் 14 ஆயிரத்து 257 வீடுகள் மற்றும் அனுமதி பெறாத வணிக வளாகங்கள் ஆகியவை அகற்றப்படும் என சென்னை மாநகராட்சி வட்டாரங்கள் கூறி வருகின்றன. அகற்றப்படும் குடிசைப் பகுதிகளில் பல்லவன் நகரும், நாவலர் நெடுஞ்செழியன் நகரும் அடங்கும் என்று கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியுடன் சென்னை குடிநீர் மறுசீரமைப்பு இயக்கம் மற்றும் கூவம் சூழல் மறுசீரமைப்பு அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்ட சந்திப்பில் சில கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கூவத்தையொட்டி வசிக்கும் மக்களை பெரும்பாக்கம் மற்றும் எழில்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாற்றுவதற்கு முன்னர், அவர்களுக்கு பயோமெட்ரிக் ஆய்வு மேற்கொள்ளும் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
23.9 கிலோ மீட்டர் தூரம் கொண்ட கூவம் நதியின் முகத்துவாரத்தில் தொடங்கி, மதுரவாயல் புறவழிச்சாலை வரையிலும் மாநகராட்சி, நீர்வள ஆதாரத்துறை மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் உதவியோடு, பயோமெட்ரிக் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் சூழல் மறுசீரமைப்புத் திட்டங்களைப் பற்றி அறிந்திருந்த மூத்த நிபுணர்கள் மூலம் கூவம் – சூழல் மறுசீரமைப்புத் திட்டம் முன்மொழியப்பட்டது. இதனையடுத்து, முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்கு முன்னாலேயே, ஆற்றுப் பகுதியோடு கூடிய லேங்க்ஸ் தோட்டச்சாலையின் சில குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டன. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பின்னர், குடிசைவாசிகளை மீள் குடியேற்றம் செய்யும் பணி திரும்பவும் தொடங்கியிருக்கிறது.
English Summary: 14,000 huts cleared for Cooum River Garnish. Chennai Corporation.