சென்னை: ஆவணி மாதம் துவங்கி, முதல் வேலை நாளான நேற்று, தமிழகம் முழுவதும், 14 ஆயிரத்து, 847 பத்திரங்கள் பதிவானதாக, பதிவுத்துறை தெரிவித்து உள்ளது.
ஆடி மாதம் என்பதால், தமிழகத்தில் சில வாரங்களாக பத்திரப்பதிவு எண்ணிக்கை வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.
ஆக., 17 ஆவணி துவங்கியது. ஆனால், அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், பத்திரங்கள் பதிவாகவில்லை. இதன் பின், சனி, ஞாயிறு விடுமுறைக்கு பின், முதல் வேலை நாள் துவங்கிய நேற்று, ஏராளமானோர் பதிவுக்கு வந்தனர்.
இதனால், நேற்று ஒரே நாளில், 14 ஆயிரத்து, 847 பத்திரங்கள் பதிவாகின. அதிகபட்சமாக, மதுரை மண்டலத்தில், 2,663 பத்திரங்கள் பதிவாகின. ‘சர்வர்’ பிரச்னை எழுந்ததாக கூறப்பட்ட தஞ்சாவூர் மண்டலத்தில், 803 பத்திரங்களே பதிவாகின.
சர்வர் பிரச்னை எழுந்த, வேறு சில மண்டலங்களிலும், பத்திரப்பதிவு குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது.