12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து இந்த தேர்வை சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மார்ச் 14ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23ஆம் தேதி வரை நடந்தது. இதையடுத்து மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணிகள் தற்போது நடந்த வருகிறது.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இந்த பணி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும், இரவு பகலாக நடைபெற்று வரும் இந்த பணிகள் இன்னும் ஒரு சில நாட்களில் நிறைவு பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. ஆனால் இந்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதால் வினாத்தாள் திருத்தும் பணியில் சற்று சுணக்கம் ஏற்பட்டது. தேர்தல் பணிக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் சென்றுவிட்டதால் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குறைவாக இருந்தனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணிகள் தாமதமாக நிறைவுப் பெற்றது. அதனால் தேர்வு முடிவு தள்ளிப் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனாலும் தேர்தலுக்கும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் திட்டமிட்டப்படி தேர்வு பணிகள் நடைப்பெற்று வருவதாகவும் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேர்வு முடிவை முதல் வாரத்தில் முடிவை வெளியிடலாம் என தேர்வுத் துறை உத்தேசித்துள்ளது. மே மாதம் 7 அல்லது 9ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. எனினும் இந்த தேர்வு முடிவு எப்போது வெளியிடப்படும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிக்க இருக்கிறார்.
English Summary : +2 exam results are likely to be released on May 7th or 9th