சென்னையில் அவ்வப்போது மாரத்தான் ஓட்டப்போட்டிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் வரும் 31ஆம் தேதி சுமார் 16 ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் பிரமாண்டமான மாரத்தான் போட்டி ஒன்றை நடைபெற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை ரன்னர்ஸ் அமைப்பு சார்பில் விப்ரோ ஆதரவுடன் சென்னையில் ஜனவரி 31ஆம் தேதி மாரத்தான் பந்தயம் நடைபெறவுள்ளது. 42.2 கிலோ மீட்டர் தூரமுள்ள முழு மாரத்தான் போட்டி, 21.1 கிலோ மீட்டர் தூரமுள்ள அரை மாரத்தான், 10 கிலோ மீட்டர் தூரமுள்ள மினி மாரத்தான் போட்டி என மூன்று வகையாக போட்டிகள் நடத்தப்படுகிறது.
முழு மாரத்தான் போட்டி அதிகாலை 4 மணிக்கும், அரை மாரத்தான் போட்டி அதிகாலை 4.30 மணிக்கும் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் உள்ள பறக்கும் ரெயில் நிலையத்தின் அருகில் இருந்து தொடங்குகிறது. 10 கிலோ மீட்டர் தூர ஓட்டம் நேப்பியர் பாலத்தில் இருந்து காலை 7 மணிக்கு ஆரம்பமாகிறது.
போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.15 லட்சம் ஆகும். இதில் முழு மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.1 லட்சமும், அரை மாரத்தானில் முதலிடம் பிடிப்பவர்களுக்கு ரூ.75 ஆயிரமும், 10 கிலோ மீட்டர் தூர ஓட்டத்தில் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.35 ஆயிரமும் பரிசாக அளிக்கப்படுகிறது. இந்த போட்டியில் பங்கேற்க சுமார் 16 ஆயிரம் பேர் இதுவரை பதிவு செய்து இருக்கிறார்கள்.
இந்த தகவலை போட்டியின் இயக்குனர் கே.ஹரிசங்கர் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
English Summary: 3 types of marathon match in Chennai on January 31.