bharath22116ஜெர்மனி எப்.எம்.ஹெச். சீமென் பல்கலைக்கழகமும், சென்னை அருகே சேலையூர் என்ற பகுதியில் உள்ள பாரத் பல்கலைக்கழகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதன்படி மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி அறிவாற்றல் ஆகியவற்றை இரு பல்கலைக்கழகங்களும் பரிமாறிக்கொள்வதோடு பாரத் பல்கலைகழகத்தில் படித்த மாணவர்களில் உயர்கல்வி படிக்க ஜெர்மனி செல்லும் வாய்ப்பும் உள்ளது.

இதுகுறித்து எப்.எம்.ஹெச்.சீமென் பல்கலை. சர்வதேசக் கல்வி பரிமாற்றத் துறை பேராசிரியர் கிருஷ்ணன் நாகராஜன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- மருத்துவம், பொறியியல் தொழில்நுட்பக் கல்வி அறிவாற்றல் பரிமாற்றம் மூலம் வளர்ச்சியும், முன்னேற்றமும் பெற முடியும். பாரத் பல்கலை. மாணவர்கள் ஜெர்மனிக்குச் சென்று பயிலவும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு வந்து பயிலவும் வகை செய்யப்பட்டுள்ளது. இங்கு பொறியியல், மருத்துவக் கல்வி பயின்ற மாணவர்கள் ஜெர்மனியில் உயர்கல்விப் படிப்பை படித்துக் கொண்டே வேலைவாய்ப்புகளைப் பெறவும் ஒப்பந்தம் பேருதவி புரியும்’என்று கூறினார்.

மேலும் இதுகுறித்து எம்.பொன்னவைக்கோ கூறியபோது, ‘இந்த ஆண்டில் சுமார் 50 மாணவர்கள் சீமென் பல்கலை.யில் உயர் கல்வி பயில்வர்’ என்றார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சி சென்னை குரோம்பேட்டை பாலாஜி மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பாரத் பல்கலை. துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ, ஜெர்மனி எப்.எம்.ஹெச்.சீமென் பல்கலை. பேராசிரியர் கிருஷ்ணன் நாகராஜன், பாரத் பல்கலை. ஆய்வுத் துறை இயக்குநர் பி.இராமசாமி, ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் என்.இளமாறன், மருத்துவக் கல்லூரி முதல்வர் டி.ஆர்.குணசேகரன், கல்வி ஆலோசகர் ஆர்.வீரபாகு, மருத்துவ இயக்குநர் எம்.ராஜகோபால், பேராசிரியர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

English Summary: Germany Siemens University – Chennai Bharath University MOU(memorandum of understanding).