சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கம் முதல், பட்டினப்பாக்கம் வரை செல்லும், 2.55 கி.மீ., லுாப் சாலையை மேம்படுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறாது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு புறம்பாக, சாலையை விரிவாக்கம் செய்ய, மாநகராட்சி முயல்வதாகவும் இதனால் இந்த சாலை பணிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை தி.நகரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர், தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில், சாலையை மேம்படுத்தும் பணிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, பசுமை தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில், இறுதி கட்டத்தை எட்டிய நிலையில், மனுதாரர் தரப்பில், மேல் முறையீட்டு மனு, பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கலானது.

அந்த மனு, இரண்டாவது அமர்வு முன், விசாரணைக்கு வந்தபோது, சாலையை மேம்படுத்த விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில், முதன்மை அமர்வு முன், மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒரு வழக்கை இரண்டு அமர்வுகள் விசாரிக்கும்பட்சத்தில், இரு வேறான முடிவுகளில் கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. அதனால், டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரிக்க பரிந்துரை செய்து தென்மண்டல முதன்மை அமர்வில், வழக்கை தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த டில்லி முதன்மை பசுமை தீர்ப்பாய தலைவர் ஸ்வேந்தர் குமார், நீதிபதி எம்.எஸ்.நம்பியார், உறுப்பினர்கள், டி.கே.அகர்வால், பிக்ரம் சிங் சஜ்வான் ஆகியோர் அடங்கிய அமர்வு சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, “லுாப் சாலையை, ஏற்கனவே இருந்த அகலத்துக்கும், கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அளித்த அனுமதி அளவுக்கு, சாலை, நடைபாதை அமைத்து கொள்ளலாம்; ஆனால், சாலையை விரிவாக்கம் செய்ய தடை விதிக்கப்படுகிறது. மேலும், ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை, இரவு, 11:00 முதல் காலை, 5:00 மணி வரை எந்தவித பணிகளுக்கும், அதிக ஒளி தரக்கூடிய விளக்குகள் பயன்படுத்தக்கூடாது. கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை மீறும்பட்சத்தில், அதற்கு மாநகராட்சி ஆணையரே பெறுப்பேற்க வேண்டும். மாநகராட்சி, சாலையை விரிவாக்கம் செய்யும் பட்சத்தில், மீண்டும் தீர்ப்பாயத்தை மனுதாரர் அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

English Summary : Delhi Green Tribunal banned to widen Chennai Marina – Pattinapakkam loop road.