எம்.பி.பி.எஸ் படிப்பு படிக்க பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில் 20 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,257 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு சுமார் 32,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நிகழாண்டில் 4,000-த்துக்கும் அதிகமான மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 28,053 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
2015-16 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க கடந்த மே 14-ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் தொடங்கியது. கடந்த 28ஆம் தேதி விண்ணப்ப விநியோகம் முடிவடைந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. கடைசி நாளில் மட்டும் 7,217 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அலுவலகத்துக்கு கடைசி நாளான நேற்று மாலை 5 மணி வரை 31,332 நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர்ந்துள்ளன. விரைவுத் தபால்கள் மூலம் மேலும் விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளதால், நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 32 ஆயிரத்தை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் ஜூன் 12-ஆம் தேதி வெளியாகும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவித்துள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக ஒரே கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்களை வரிசைப்படுத்தி தரவரிசைப் பட்டியல் தயாரிக்கும் வகையில் “ரேண்டம் எண்’ ஜூன் 9 அல்லது ஜூன் 10-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கான முதல் கவுன்சிலிங் வரும் ஜூன் 19-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary: 32000 Medical Applications were submitted for 2015-16 Academics.