எம்.பி.பி.எஸ் படிப்புக்கு கடந்த கல்வியாண்டை விட இந்த கல்வியாண்டில் சுமார் 4,000க்கும் அதிகமான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு நேர்மாறாக பொறியியல் படிப்புக்கு கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விண்ணப்பங்கள் வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, இந்த கல்வி ஆண்டில் சுமார் ஒரு லட்சத்துக்கு அதிகமான இடங்களில் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருக்க வாய்ப்பு இருப்பதாக பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொறியியல் படிப்புக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேற்றுடன் கடைசி தினம் முடிவடைந்துள்ள நிலையில் 1.40 லட்சம் பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் மட்டுமே வந்து சேர்ந்துள்ளன. திங்கட்கிழமை வரை தபால் மூலம் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்பதால் மொத்தம் 1.60 லட்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2013-14 கல்வியாண்டில் 1.90 லட்சம் பேரும், 2014-15 கல்வியாண்டில் 1.75 லட்சம் பேரும் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு 570க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.70 லட்சம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. கலந்தாய்வுக்கு இடையே, தனியார் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைக்கும் என்பதால் இடங்களின் எண்ணிக்கை 2.30 லட்சத்தை எட்ட வாய்ப்பு உள்ளது. இதில், 1.10 லட்சம் இடங்கள் நிரம்பி, 1.20 லட்சம் இடங்கள் சேர்க்கை நடைபெறாமல் காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறது.

English Summary: Nearly One Lakh BE Seats will be vacant this year.