ரயில் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை குறித்த இரு வார விழா ஒன்று தற்போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற இந்த விழாவின் ஒரு பகுதியில் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ராஜ்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜ்குமார் கூறியதாவது: சென்னை – பெங்களூர் இடையே அதிவிரைவு ரயில் இயக்குவது குறித்து சீன ரயில்வே துறை ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் இந்தத் திட்டத்துக்கு தேவையான நிதி கிடைத்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் நிலுவையில் உள்ள நான்கு முக்கிய ரயில் திட்ட விவரங்கள் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு மிகுந்த ஆர்வமாக உள்ளதாகவும் கூறிய அவர், சென்னையில் இருந்து கன்னியாகுமரி, கோவை இடையிலான அதிவேக ரயில்களை இயக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

மேலும் சென்னையை பொருத்தவரை சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை, கொருக்குப்பேட்டை – அத்திப்பட்டு இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்தச் செய்தியாளர் சந்திப்பில் சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் அனுபம் சர்மா, தெற்கு ரயில்வே முதன்மை நிர்வாக அதிகாரி (கட்டுமானம்) வேங்கடசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

English Summary: New Railway Lines work started between Chennai Beach Station to Korukkupettai Station.