சென்னையில் ஒரே நாளில் மூளைச் சாவு அடைந்த 5 பேர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகளின் மூலம் 23 பேர்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இதனையடுத்து உடல் உறுப்புகளை தானம் அளித்தவர்களின் குடும்பத்தினர்களை கெளரவிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்று நேற்று சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, சுகாதாரச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஹரிஷ் சந்திரபாபு, சிதம்பரத்தைச் சேர்ந்த சந்திரசேகர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர் ரெட்டி, சென்னை ராயபுரத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார், நெய்வேலியைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆகிய ஐந்து பேர் அடுத்தடுத்து மூளைச்சாவு அடைந்தனர். பின்னர் இவர்கள் ஐந்து பேர்களின் உறவினர்களின் விருப்பத்தின் பேரில் மூளைச்சாவு அடைந்த நபர்களிடம் இருந்து 10 சிறுநீரகங்கள், 6 கண்கள், 2 இதயங்கள், 5 கல்லீரல்கள் பெறப்பட்டன.
அதன்பின்னர் 8 அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் தலைமையில் ஏப்ரல் 4ஆம் தேதி இரவில் இருந்து தொடர்ந்து 36 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து 5 கல்லீரல்கள், 4 சிறுநீரகங்கள், 1 இருதயம் ஆகியவை அதே மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளிகளுக்கு உடனடியாக பொருத்தப்பட்டன. மற்ற உடல் உறுப்புகள் பிற தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டன என்று தெரிவித்தனர்.
சென்னையில் உடல் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் ஒரே நாளில் 23 பேர்களுக்கு மறுவாழ்வு கிடைத்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.
English Summary: 5 Peoples were dead due to brain malfunction, saves 23 peoples life in Chennai.