கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையில் மாநிலத்தின் பல இடங்களில் பல்வேறு வகையான கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நிலையில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இரவும் பகலும் பாடுபடும் காவல்துறையினர்களின் குழந்தைகளுக்கு சமீபத்தில் சென்னையில் கோடைக்கால சிறப்பு பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.

மே மாதம் 4ஆம் தேதி முதல் தொடங்கிய இந்தப் பயிற்சி வகுப்பை சென்னை பெருநகர காவல்துறையே ஏற்று நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பயிற்சி வகுப்பில் குதிரையேற்றம், நீச்சல் பயிற்சி, துப்பாக்கி சுடும் பயிற்சி, இசைப் பயிற்சி, கணினி பயிற்சி, யோகா, கராத்தே உள்ளிட்ட 12 வகையான கலைகள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. இத்தகைய பயனுள்ள பயிற்சி வகுப்புகளை சென்னை காவல்துறை வழங்குவது இதுவே முதல்முறை ஆகும்.

இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள காவல்துறையினர்களின் குழந்தைகள் பெயர்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒரு மாத காலம் நடைபெறும் இந்தப் பயிற்சி வகுப்பில், துப்பாக்கி சுடும் பயிற்சி எழும்பூரில் உள்ள ஆதித்தனார் ரைபிள் கிளப்பிலும், குதிரையேற்றம் பயிற்சி எழும்பூர் குதிரைப்படை வளாகத்திலும், டென்னிஸ் பயிற்சி வகுப்பு நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்திலும், நீச்சல் பயிற்சி திருவல்லிக்கேணி அண்ணா நீச்சல் குளம், முகப்பேர் டால்பின் நீச்சல் குளம், செனாய்நகர், வேளச்சேரி நீச்சல் குளம் ஆகியவற்றிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் இந்தப் பயிற்சி வகுப்பில் இது வரை 1,200 மாணவ-மாணவிகள் சேர்ந்துள்ளதாகவும் இந்தப் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் சென்னை காவல்துறையை அணுகலாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

 

English Summary: Tamilnadu Police Department arranges the Summer Special Classes for School Children.