புதுடெல்லி: நாடு முழுவதும் அமைப்பு சார்ந்த துறைகளில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகள் குறித்த புள்ளி விவரங்களை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எப்.) வெளியிட்டு உள்ளது. இதில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கடந்த ஜனவரி மாதம் வரையிலான 17 மாதங்களில் புதிதாக உருவான வேலைவாய்ப்புகளை அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி மேற்படி 17 மாதங்களில் 76.48 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேற்படி மாதங்களில் சுமார் 76.48 லட்சம் புதிய சந்தாதாரர்கள் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு திட்டங்களில் இணைந்துள்ளதாக அந்த நிறுவனம் தகவல் வெளியிட்டு இருக்கிறது.
இதன் மூலம் கடந்த 17 மாதங்களில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகி இருப்பதாக இ.பி.எப். நிறுவனம் கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக கடந்த ஜனவரி மாதம் 8.96 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.