தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் மே 8-ஆம் தேதி வெளியாகவுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 1 பொதுத் தேர்வு, மார்ச் 6-ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தேர்வை 7,218 பள்ளிகளைச் சேர்ந்த 8,16,618 மாணவ – மாணவியர் மற்றும் தனித் தேர்வர்கள் 5, 032 பேர் என மொத்தமாக 8,21, 650 பேர் எழுதினர்.

பொதுத் தேர்வின் இறுதித் தேர்வாக கணினி அறிவியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களுக்கான தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்வு சற்று எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத் திட்டத்தின்படி பொதுத் தேர்வு நடைபெற்றது. இதனால் மாணவர்கள் மத்தியில், தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அத்துடன், இந்த ஆண்டு தேர்வில், கணிதம், விலங்கியல், வணிகவியல் உள்ளிட்ட பெரும்பாலான பாடங்களில், வினாத்தாள்கள் சற்று கடினமாகவே இருந்தன.

வேதியியல், உயிரியல் போன்ற பாடங்களில் நீட், ஜே.இ.இ. தேர்வுகளுக்கு கேட்கப்படுவது போன்று வினாக்கள் அமைந்திருந்தன. இதனால் மேற்கண்ட பாடங்களில், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்கும் என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து சில நாள்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கவுள்ளது. இதையடுத்து ஏற்கெனவே திட்டமிட்டபடி மே 8-இல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *