நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக கன மழை பெய்து வரும் சூழலில் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக தீவிரமடைந்து வருகிறது. மாவட்டத்திலுள்ள 12 நீராதாரங்களில் 5 அணைகள் முழுக் கொள்ளளவை எட்டி விட்டதால் உபரி நீர் திறந்து விடப்படுகிறது. ஏனைய 7 நீராதாரங்களில் பார்சன்ஸ்வேலி நீர்த்தேக்கத்திலிருந்து உதகை, வெலிங்டன் ராணுவ மையத்துக்கு குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மற்ற 6 நீர்த்தேக்கங்களும் முழுக் கொள்ளளவை எட்டுவதற்கு ஒரு சில அடிகளே உள்ளன. தொடர்ந்து பெய்துவரும் மழையால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
முழுக் கொள்ளளவை எட்டிய பைக்காரா, அவலாஞ்சி, மேல் பவானி, குந்தா ஆகிய 4 அணைகள் திறக்கப்பட்டதை அடுத்து 5 ஆவது அணையாக கிளன்மார்கன் அணையும் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்டது. இதனால் முதுமலை புலிகள் காப்பகம் வழியாக மாயாற்றுக்கு செல்லும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கான நீரும் அதிக அளவில் வெளியேறி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. உதகையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை மழை பெய்த நிலையில், காலையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகளுக்காகவே ஓய்வளித்ததுபோல சுமார் 2 மணி நேரம் மழையில்லாமல் இருந்தது.
இந்நிலையில் மாவட்டத்துக்கு மேலும் 2 நாள்கள் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டத்தில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் அதிக அளவாக அவலாஞ்சியில் 252 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பிற பகுதிகளில் பதிவான மழை விவரம் (மி.மீ.):
மேல் பவானி- 188, கிளன்மார்கன்- 132 , தேவாலா-128, நடுவட்டம்- 107, கூடலூர்- 84, எமரால்டு- 78, உதகை- 62.4, குந்தா- 36 , கேத்தி-32, கல்லட்டி- 27, குன்னூர்- 23, கெத்தை- 15, கொடநாடு- 12, பர்லியாறு- 9, கிண்ணக்கொரை- 6, கோத்தகிரி- 2.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குன்னூரில்: குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.