முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கக் கடும் போட்டி நிலவி வருகிறது. விப்ரி மீடியா நிறுவனம் தயாரிக்க, விஜய் இயக்கத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமாக உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தியில் உருவாகும் இதன் படப்பிடிப்பு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி தொடங்க இருக்கிறது.
மிஷ்கினிடம் உதவியாளராகப் பணியாற்றிய பிரியதர்ஷினியும், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாக அறிவித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் தற்போது ‘சக்தி’ படத்தை இயக்கி முடித்துள்ள இவர், படத்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து அடுத்த மாதம் 20-ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதன் படப்பிடிப்பும் அடுத்த வருடம் ஜெயலலிதா பிறந்த நாளில் தொடங்க இருக்கிறது.
ஜெயலலிதாவின் வாழ்க்கையை வைத்து ஏற்கெனவே இரண்டு படங்கள் உருவாகும் நிலையில், மூன்றாவதாகவும் ஒரு படம் உருவாக இருக்கிறது. பாரதிராஜா இந்தப் படத்தை இயக்கப் போகிறார். ‘அம்மா: புரட்சித் தலைவி’ என இந்தப் படத்துக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆதித்யா பரத்வாஜ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
கடந்த ஒரு வருடத்துக்கு முன்பே இந்தத் தலைப்பை அறிவித்து, படத்தைத் தயாரிக்கப் போவதாகச் சொன்னார் ஆதித்யா பரத்வாஜ். ஆனால், அறிவிப்புடன் நின்றுபோன இந்தப் படம், தற்போது தொடங்க இருக்கிறது. மற்ற இரண்டு படங்களும் பிப்ரவரிக்காகக் காத்திருக்க, இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதமே தொடங்க இருக்கிறது.
கதைக்கான ஆராய்ச்சி முடிந்து, முன்தயாரிப்பு வேலைகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கின்றன. இசையமைக்க இளையராஜாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஜெயலலிதா கேரக்டரில் நடிக்க அனுஷ்கா மற்றும் ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர்.
ஜெயலலிதா என்றால் எம்.ஜி.ஆர். இல்லாமலா? எம்.ஜி.ஆர். கேரக்டரில் நடிக்க கமல்ஹாசன் மற்றும் மோகன்லாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.