இங்கிலாந்து அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 161 ரன்களுக்கு சுருண்டது.

நாட்டிங்ஹாமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 87 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 307 ரன்கள் குவித்தது. ஷிகர் தவண் 35, கே.எல்.ராகுல் 23, சேதேஷ்வர் புஜாரா 14, கேப்டன் விராட் கோலி 97, அஜிங்க்ய ரஹானே 81, ஹர்திக் பாண்டியா 18 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பந்த் 22 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. மழை காரணமாக ஆட்டம் சிறிது நேரம் தாமதமாக தொடங்கப்பட்ட நிலையில் ரிஷப் பந்துடன் அஸ்வின் கள மிறங்கினார். குளிர்ந்த வானிலை யுடன் காற்றும் வீசியதால் இந்திய அணியின் எஞ்சிய 4 விக்கெட்களையும் இங்கிலாந்து வீரர்கள் விரைவாக வீழ்த்தினர். ரிஷப் பந்த் 51 பந்துகளில், ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டூவர்ட் பிராடு பந்தில் போல்டானார்.

அவரைத் தொடர்ந்து அஸ்வினும் (14), ஸ்டூவர்ட் பிராடு பந்தில் ஸ்டெம்புகளை பறிகொடுத்தார். முகமது ஷமி 3 ரன்னிலும், ஜஸ்பிரித் பும்ரா ரன் ஏதும் எடுக்காத நிலையிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்தில் வெளியே இந்திய அணி 94.5 ஓவர்களில் 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இஷாந்த் சர்மா ஒரு ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி கடைசி 5 விக்கெட்களை 22 ரன்களுக்கு தாரை வார்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராடு, கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்களும், அடில் ரஷித் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அலாஸ்டர் குக், கீட்டன் ஜென்னிங்ஸ் ஜோடி அதிரடி தொடக் கம் கொடுத்தது. மதிய உணவு இடைவேளையில் இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்தது. குக் 21, ஜென்னிங்ஸ் 20 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். உணவு இடைவேளைக்கு பின்னர் தொடர்ந்து விளையாடிய இந்த ஜோடியை இஷாந்த் சர்மா பிரித்தார்.

குக் 42 பந்துகளில், 5 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு குக், ஜென்னிங்ஸூடன் இணைந்து 54 ரன்கள் சேர்த்தார். அடுத்த ஓவரிலேயே ஜென்னிங்ஸை (20), பும்ரா வெளியேற்ற இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. 54 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்த நிலையில் களமிறங்கிய ஆலிவர் போப் 10 ரன்கள் சேர்த்த நிலையில் இஷாந்த் சர்மா பந்தில், ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி ஆட்டம் காண ஆரம்பித்தது.

கேப்டன் ஜோ ரூட் 16 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய பெஸ் டோக்ஸை 10 ரன்னில் ஷமி வெளியேற்றினார். இதன் பின்னர் ஜானி பேர்ஸ்டோ (10), கிறிஸ் வோக்ஸ் (8), அடில் ரஷித் (5), ஸ்டூவர்ட் பிராடு (0), ஆகியோரை சீரான இடைவெளியில் ஆட்டமிழக்கச் செய்தார் ஹர்திக் பாண்டியா. 128 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் உறுதுணையுடன் ஜாஸ் பட்லர் மட்டையை சுழற்றினார்.

முகமது ஷமி வீசிய ஓவரில் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விரட்டினார் பட்லர்.

அதிரடியாக விளையாடிய ஜாஸ் பட்லர் 32 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். முடிவில் இங்கிலாந்து அணி 38.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்களும் பும்ரா, இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர். இதையடுத்து 168 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2-வது இன்னிங்ஸை விளையாடத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *