தென்மண்டல ஏற்றுமதி வாய்ப்புகளை வெளிக்கொணர ஏதுவாக மூன்று நாள் ஆஹார்’ உணவுத் திருவிழா வரும் 23-ஆம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்குகிறது.
இதுதொடர்பாக சென்னை பத்திரிகை தகவல் மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சர்வதேச உணவு மற்றும் விருந்தோம்பல் திருவிழாவான 12-ஆவது ஆஹார்’ கண்காட்சிக்கு இந்திய தொழில் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன. மத்திய அரசின் உணவுப் பதப்படுத்தல், தொழில்துறை, வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் நடத்தப்படும் இக்கண்காட்சி ஆக. 25-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இத்திருவிழாவை ஆக.23 அன்று காலை 10.30 மணிக்கு தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலர் குமார் ஜெயந்த் தொடங்கி வைக்கிறார்.
இதில் நாட்டின் 80-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருள்களான பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், உணவுப் பதப்படுத்தும் சாதனங்கள், உணவு சுவையூட்டிகள் மற்றும் விருந்தோம்பல் மற்றும் உணவகப் பொருள்கள் விநியோகம் தொடர்பான பொருள்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
உணவுப் பதப்படுத்துதல் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்துறையில், அதிக அளவில் முதலீடு மற்றும் ஏற்றுமதி செய்வதற்கான இடமாக தென்மண்டலம் உருவாகி வருகிறது. குறிப்பாக ஆஹார்’ கண்காட்சி, பிரதமரின் இந்தியாவில் தயாரிப்போம்’, திறன் இந்தியா’, தொடங்கிடு இந்தியா’, மற்றும் எழுந்திடு இந்தியா’ போன்ற இயக்கங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பான நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சியை நாள்தோறும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.