இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் நடைபெற்று வருகிறது.

இந்தியா முதல் இன்னிங்சில் 329 ரன் குவித்தது. இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து இருந்தது.

நேற்றைய 3வது நாளில் விராட்கோலி மிகவும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இந்தப் போட்டித் தொடரில் அவரது 2-வது செஞ்சுரியாகும். ஏற்கனவே முதல் டெஸ்டில் சதம் அடித்து இருந்தார். கோலி 103 ரன்னும், புஜாரா 72 ரன்னும் ஹர்த்திக் பாண்ட்யா 52 ரன்னும் (அவுட் இல்லை) எடுத்தனர்.

இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 352 ரன் எடுத்து இருந்தபோது ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் இங்கிலாந்துக்கு 521 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 23 ரன் எடுத்து இருந்தது.

இந்த டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் எஞ்சி இருக்கிறது. இங்கிலாந்து அணிக்கு மேலும் 498 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் உள்ளது.

இந்த ரன்னை எடுப்பது என்பது இங்கிலாந்துக்கு மிகப்பெரிய சவாலே. இந்த இலக்கை நெருங்குவது கடினமே. அந்த அணியின் 10 விக்கெட்டை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.

இந்த தொடரில் விராட்கோலி இதுவரை 440 ரன்கள் குவித்து உள்ளார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக ரன் எடுத்த இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு அசாருதீன் கேப்டன் பதவியில் 426 ரன்கள் எடுத்து இருந்தார். இதை கோலி முறியடித்தார்.

விராட்கோலி தனது 23-வது சதத்தை பதிவு செய்தார். 118 இன்னிங்சில் அவர் இந்த செஞ்சூரியை தொட்டார். இதன்மூலம் பிராட்மேன் (59 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (109), ஸ்டீவன் சுமித் (110) ஆகியோருக்கு அடுத்த நிலையில் கோலி உள்ளார்.

இந்திய வீரர்களில் ஷேவாக்குடன் இணைந்து அதிக சதம் அடித்த வீரர்களில் 4-வது இடத்தை பிடித்தார்.

விராட்கோலி கேப்டன் பதவியில் 16-வது சதத்தை (38 டெஸ்ட்) பதிவு செய்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் அதிக சதம் அடித்தவர்களில் 3-வது இடத்தை பிடித்தார். சுமித் 25 சதத்துடன் (109 போட்டி) முதல் இடத்திலும், பாண்டிங் 19 சதத்துடன் (77 டெஸ்ட்) 2-வது இடத்திலும் உள்ளனர். ஸ்டீவன் சுமித், ஸ்டீவ்வாக், ஆலன் பார்டர் ஆகியோரை கோலி முந்தி இருந்தார். இந்த 3 பேரும் கேப்டன் பதவியில் 15 சதம் அடித்து இருந்தனர்.

வெளிநாட்டில் கோலி அடித்த 13-வது சதமாகும். இதில் கேப்டன் பதவியில் மட்டும் 9 செஞ்சூரியை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *