கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை வழியாக ஹைதராபாத்துக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
தமிழகத்தின் தென்மாவட்ட பகுதியிலிருந்து தெலங்கானா தலைநகரான ஹைதராபாத்துக்கு செல்ல தினசரி நேரடி ரயில் வசதி இல்லை. திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலை மற்றும் பல்வேறு பணிகள் காரணமாக ஹைதராபாத்துக்கு சென்று வருகிறார்கள். இதே போன்று தெலங்கானா, ஆந்திரத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற ஆன்மிகத் தலங்களுக்கு வரும் பயணிகள் நேரடியாக இப்பகுதிகளுக்கு வந்து செல்ல தினசரி ரயில் வசதி இல்லை.
தமிழகத்தின் தென்பகுதியிலிருந்து ஹைதராபாத் செல்பவர்கள் காலையில் சென்னைக்கு சென்று, அங்கிருந்து மாலையில் புறப்படும் ஹைதராபாத் ரயிலில் செல்ல வேண்டும். இதனால் பயணிகளுக்கு பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளுக்கு தினசரி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஹைதராபாத்துக்கு வாராந்திர ரயில் சேவை மட்டுமே உள்ளது. இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்கச் செயலர் பி. எட்வர்ட் ஜெனி தெரிவித்ததாவது:
கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக ஹைதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் பல ஆண்டுகளாகவே கோரிக்கை வைத்து வருகிறது. செகந்திராபாத்தை தலைமையிடமாக கொண்ட தென் மத்திய ரயில்வே, கன்னியாகுமரியிலிருந்து ஹைதராபாத்துக்கு தினசரி ரயில் இயக்க 2009ஆம் ஆண்டே முயற்சி மேற்கொண்டது. ஆனால், கன்னியாகுமரியில் முனைய வசதிகள் குறைவாக இருக்கிற காரணத்தைக் கூறி திருவனந்தபுரம் கோட்டம் இந்த திட்டத்துக்கு போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் இத்திட்டம் கைவிடப்பட்டதாக அப்போது தெரிவிக்கப்பட்டது.
2010ஆம் ஆண்டு அப்போதைய ஆந்திர முதல்வர், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து தங்கள் மாநில கோரிக்கையை சமர்ப்பிக்கும்போது சென்னை – காச்சுகுடா ரயிலை மதுரை, நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்துக்கு நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இக்கோரிக்கையும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ரயில் கால அட்டவணை மாநாட்டில், ஒரு மண்டலத்திலிருந்து மற்றொரு மண்டலத்துக்கு புதிய ரயில் இயக்க கருத்துரு சமர்ப்பிக்கும்போது, மறுமுனையில் உள்ள மண்டலம் மற்றும் கோட்ட அதிகாரிகள் இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆனால் மதுரை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்க திருவனந்தபுரம் கோட்ட அதிகாரிகள் ஒப்புதல் அளிப்பதில்லை.
ஆகவே தென்மாவட்ட பயணிகளின் நலன் கருதி, கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி, மதுரை, திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருப்பதி வழியாக ஹைதராபாத்துக்கு தினசரி விரைவு ரயில் இயக்க வேண்டும். இந்த வழித்தடத்தில் ரயில் இயக்கினால் தமிழகத்தில் உள்ள 12 மாவட்ட பயணியர் நேரடியாக பயன்பெறும்படி இருக்கும் என்றார் அவர். இதுகுறித்து துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.