ஜப்பானைச் சேர்ந்த மிகப்பெரிய மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான நிஸான், இந்தியாவில் 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நிஸான் நிறுவனத்தின் தலைவர் (ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா) பெய்மேன் கார்கர் தெரிவித்ததாவது:
இந்தியாவில் நிறுவனத்தின் ஸ்திரத் தன்மையை மேலும் அதிகரிக்க உறுதி பூண்டுள்ளோம். அதன் ஒரு பகுதியாக நிஸான் மற்றும் டாட்ஸன் நிறுவனங்களுக்கு தனித்தனியாக விநியோகஸ்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளோம். குறிப்பாக, சிறிய நகரங்களில் அதனை தீவிரமாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், டிஜிட்டல் முனையங்களை வலுப்படுத்தும் வகையில் மொத்தம் 1,500 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் தீவிரமாகவுள்ளோம்.
தற்போதைய நிலையில், சென்னைக்கு அருகேயுள்ள நிறுவனத்துக்கு சொந்தமான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் ஏற்கெனவே 7,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், புதிய முதலீடுகளை பெருக்குவதன் மூலம் மேலும், 1,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கவுள்ளோம். புதிதாக உருவாக்கப்படும் டிஜிட்டல் முனையங்களில் எஞ்சிய 500 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும்.
இந்தியாவுக்கு இன்னும் மிக உயரிய தரத்திலான மோட்டார் வாகனங்களை தயாரித்து அளிக்க சபதமேற்றுள்ளோம். எனவேதான், அதற்கான துறைகளை மேலும் வலுவுள்ளதாக்கும் வகையில் நிஸான் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளது.
கூட்டு முயற்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை ஆலையில் வாகன உற்பத்தி திறனானது முழு அளவில் உள்ளது. தற்போது அந்த ஆலையின் ஆண்டு வாகன உற்பத்தி திறன் 4.8 லட்சமாக உள்ளது என்றார் அவர்.