டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினசரி ஏற்படும் இழப்பு ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கட்டண உயர்வுக்கு பிறகு அரசு பேருந்துகளை 30 லட்சம் பயணிகள் புறக் கணித்ததால் அதிகாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

60 சதவீத கட்டணம் உயர்வு: அரசு பேருந்துகளுக்கான கட்டணத்தை கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி சராசரியாக 60 சதவீதம் வரை தமிழக அரசு உயர்த்தியது. இந்த கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால், சிறிய அளவில் மாற்றம் செய்து அரசு அறிவித்தது.

இருப்பினும் விரைவு, சொகுசு, ஏசி என பல வகை கட்டணங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அவை சிதிலமடைந்த நிலையில் இருப்பதால், அரசு பேருந்துகளைத் தவிர்த்து விட்டு, ரயில் போன்ற மாற்று போக்குவரத்தில் மக்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் கட்டண உயர்வுக்கு பிறகு அரசு போக்குவரத்து கழகங்களின் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.10 கோடியில் இருந்து 1.80 கோடியாக குறைந்துள்ளது. சுமார் 30 லட்சம் பயணிகள் மாற்று போக்கு வரத்துக்கு மாறியுள்ளனர்.

உயர் அதிகாரிகள் புலம்பல்: வழக்கமாக பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்களிடம் எதிர்ப்பு இருந்தாலும், அடுத்த சிலமாதங்களில் அந்த நிலை மாறிவழக்கமான நிலைக்கு பயணிகளின் எண்ணிக்கை வந்துவிடும். ஆனால்,இந்த முறை சுமார் 30 லட்சம் பயணிகள் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மீண்டும் திரும்பவில்லை என அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

டீசல் மானியம் இல்லை: டீசல் விலை லிட்டருக்கு ரூ.43.98 என இருந்தபோது, இனிமேல் உயரக்கூடிய விலைக்கு ஏற்ப டீசல் மானியம் வழங்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2012-ம் ஆண்டு செப்டம்பரில் அறிவித்திருந்தார். அதன்படி, 2017-18-ம் ஆண்டில் ரூ.800 கோடி டீசல் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிதியாண்டில் டீசல் மானியத்துக் காக தொகை ஏதும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.ஆனால், அரசின் அறிவிப்பின்படி, தற்போதுள்ள நிலையில், டீசல் மானியமாக லிட்டருக்கு ரூ.31.21 வீதம் வழங்கப்பட வேண்டும். அரசு போக்குவரத்து கழகங்களில் நாளொன்றுக்கு 16 லட்சத்து 36 ஆயிரத்து 400 லிட்டர் டீசல்பயன்படுத்தப்படுகிறது. நாளொன்றுக்கு மானியமாக அரசால் வழங்கப்பட வேண்டிய தொகை ரூ.5 கோடியே 10 லட்சத்து 72 ஆயிரத்து நாற்பத்தி நான்கு வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.1,860 கோடி அளவில் கூடுதல் செலவினைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

செலவுகள் அதிகரிப்பு: இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘கடந்த 3 மாதங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகு அரசு எதிர்பார்த்த வசூல் கிடைக்க வில்லை. அரசு போக்குவரத்து கழகங்களைத் தவிர்த்து மாற்று போக்குவரத்து வசதிக்கு மாறிய 30 லட்சம் பயணிகளும் மீண்டும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு திரும்பவில்லை.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, சுங்கச்சாவடி கட்டணத்தால் செலவுகள் அதிகரித்துள்ளன. கட்டண உயர்வுக்கு முன்பு இருந்த தினசரி இழப்பு ரூ.6 கோடியில் இருந்து தற்போது ரூ.9 கோடியாக உயர்ந்துவிட்டது. பயணிகளை மீண்டும் ஈர்க்க புதிய பேருந்துகளை இயக்க வேண்டும். மேலும், தற்போதுள்ள கட்டண முறையிலும் சிறிய அளவில் குறைக்க வேண்டும். அல்லது டீசலுக்கான மானியத்தை அரசு வழங்க முன்வர வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ஏஐடியுசிபொதுச்செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, ‘‘பொது போக்குவரத்து துறையை ஊக்குவிக்க வேண்டிய மத்திய, மாநில அரசுகள், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கும் டீசல் மீதான வரியை ரத்து செய்ய வேண்டும்.

சுங்கச்சாவடிகளுக்கு ரூ.1000 கோடி: இதேபோல், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 52 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஆண்டுதோறும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால், சுங்கச்சாவடிகளுக்கு மட்டுமே ஆண்டுதோறும் ரூ.1000 கோடி செலவிட வேண்டியுள்ளது. எனவே, பொதுத்துறையை பாதுகாக்க இந்த கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு முன்வர வேண்டும்.’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *