குன்னுார்: குன்னுார் – ஊட்டி இடையே மீண்டும் சிறப்பு மலை ரயில் இயக்குவதற்காக, நுாற்றாண்டு பழமை வாய்ந்த, ஒரே நிலக்கரி நீராவி இன்ஜின், நேற்று கொண்டுவரப்பட்டது. நீலகிரியில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, ஊட்டி – மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில், சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட நீராவி ரயில் இன்ஜின், 1918 முதல், நிலக்கரியை பயன்படுத்தி இயக்கப்பட்டது.
நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த இன்ஜின் பயனின்றி, குன்னுார் ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தப்பட்டது.’நல்ல நிலையில் உள்ள இந்த இன்ஜினை பராமரித்து, மீண்டும் இயக்க வேண்டும்’ என, மலை ரயில் ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, குன்னுாரில் இருந்த இன்ஜின், மேட்டுப்பாளையம் கொண்டு செல்லப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடத்தி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.தொடர்ந்து, நேற்று மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுார் பணிமனைக்கு, மாற்று இன்ஜின் மூலம், கொண்டு வரப்பட்டது. விரைவில், குன்னுார் – ஊட்டிக்கு இயக்கப்பட உள்ளது.