திருப்பதியில் முக்கிய விழாவான பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை கோலாகலமாக தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் பிரமோற்சவ விழாவில், தினமும் காலையும், மாலையும், வெவ்வேறு வாகனங்களில் மலையப்ப சாமி அருள் பாலிப்பார்.
அதன்படி நேற்றிரவு சர்வ பூபால வாகனத்தில் சாமி உலா நடைபெற்றது. அப்போது கோவில் மாடவீதிகளில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், பிரமோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று இரவு நடைபெற உள்ளது. இதனை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் கூடுவார்கள்.
எனவே கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக இன்று காலை 10 மணி முதலே பக்தர்கள் மாடவீதிகளில் உள்ள பார்வையாளர்கள் அரங்குகளில் காத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது.
கருடசேவையை முன்னிட்டு தர்ம தரிசனத்தை தவிர, மற்ற அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், நேற்று நள்ளிரவு முதல் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.