சென்னை: ‘வங்கக் கடலில் உருவான, காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்துள்ளதால், நாளை வரை, கடல் கொந்தளிப்பாக காணப்படும்’ என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலச்சந்திரன் வெளியிட்ட அறிவிப்பு:
வங்கக் கடலின், மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பின், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறும். அதனால், வங்கக் கடலில், அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். இன்று, மணிக்கு, 75 கி.மீ., வேகம் வரை, பலத்த கடல் காற்று வீசும். எனவே, தெற்கு வங்கக் கடலுக்குள், இன்று வரையிலும், ஆந்திரா, ஒடிசாவை ஒட்டிய கடல் பகுதிக்குள், நாளை வரையிலும், மீனவர்கள் செல்ல வேண்டாம்.
இந்த காற்றழுத்த மண்டலத்தால், வடக்கு கடலோர மாவட்டங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில், விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.
தமிழகத்தில், நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக, பள்ளிப்பட்டு, காஞ்சிபுரம், தாமரைபாக்கம், மாமல்லபுரத்தில், 5 செ.மீ., மழை பதிவானது. ஸ்ரீபெரும்புதுார், செம்பரம்பாக்கம், புதுச்சேரி, விழுப்புரத்தில், 4 செ.மீ., மழை பெய்துள்ளது.