சென்னை யானைகவுனி பகுதியில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள 300 கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை சென்னை பெருநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், நடந்த குற்றங்களில் குற்றவாளிகளை கைது செய்யவும் சிசிடிவி கேமராக்கள் பெரிதும் உதவுகின்றன. மேலும், பல குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதங்கள், வாகன விபத்துக்கள் மற்றும் வன்முறை சம்பவங்களின்போது உண்மை தன்மையை அறிந்து கொள்வதற்கு சிசிடிவி கேமரா காட்சிகள் பெரிதும் உதவியுள்ளன.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சிசிடிவி கேமராக்களை சென்னை பெருநகர் முழுவதும் பொருத்தி, குற்றங்கள் நடவாமல் தடுக்க வேண்டும் எனவும், குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், சென்னை பெருநகர் முழுவதும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார். மேலும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சென்னை பெருநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 24.09.2018 அன்று மாலை சுமார் 05.30 மணியளவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் முனைவர். திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் C-2 யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் புதிதாக நிறுவப்பட்ட 300 சிசிடிவி கேமராக்களின் இயக்கத்தை தொடங்கி வைத்து கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும். இதன் மூலம் யானைகவுனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் 100 சதவீதம் கண்காணிப்பு கேமரா பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.