தமிழகத்தின் 18 அரசு மருத்துவமனைகளில் சுமார் ரூ. 108 கோடியில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவை அடுத்த 3 மாதங்களுக்குள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்பட உள்ளன.

நோய்களை துல்லியமாகக் கணிக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவுபவை(Magnetic Resonance Imaging (MRI) எனப்படும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் சி.டி. ஸ்கேன் படங்களை விட, எம்.ஆர்.ஐ. மூலம் எடுக்கப்படும் படங்கள் எலும்பு, மூட்டு, தசை, தசைநார்கள், மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் உள்ளிட்டவற்றை மிகத் தெளிவாக படம்பிடித்துக் காட்டும். பல அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. எடுக்கும் வசதி இல்லாததால் ஏழை, எளிய மக்கள் பலர் தனியார் ஸ்கேன் மையங்களில் அதிக பணம் கொடுத்து எம்.ஆர்.ஐ. எடுக்கும் அவல நிலை நீடிக்கிறது.

இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, தற்போது 12 மருத்துவமனைகளில் புதிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்களையும், அதீத பயன்பாடு காரணமாக 6 மருத்துவமனைகளில் பழையதை மாற்றி புதிய எம்.ஆர்.ஐ. இயந்திரத்தையும் அமைத்து வருகிறது.

இதுகுறித்து தமிழக அரசின் மருத்துவப் பணிகள் கழகத்தைச் சேர்ந்த உயரதிகாரிகள் கூறியது:

தமிழகத்தில் உள்ள கடலூர், நாகப்பட்டினம், பெரம்பலூர், விருதுநகர், நாமக்கல், திண்டுக்கல், ராமநாதபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, கரூர் ஆகிய 12 மாவட்ட தலைமை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிதாக நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, தஞ்சாவூர், திருச்சி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, வேலூர், கோவை, திருநெல்வேலி ஆகிய மருத்துவமனைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் இருந்த எம்.ஆர்.ஐ. ஸ்கேன் இயந்திரங்கள் அகற்றப்பட்டு, அங்கு தலா ரூ. 6 கோடி மதிப்பீட்டில் புதிய அதிநவீன எம்.ஆர்.ஐ. இயந்திரங்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆக மொத்தம் சுமார் ரூ. 108 கோடியில் ஸ்கேன் மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களில் அடுத்த 3 மாதங்களுக்குள் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றார் அவர்.

எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனைக்கான கட்டணம்: அரசு மருத்துவமனைகளில் எம்.ஆர்.ஐ. எடுக்க ரூ. 2,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மருத்துவக் காப்பீடு திட்டத்தில் இலவசமாகவும் எடுக்கப்படுகிறது. இதுவே தனியார் மருத்துவமனைகள், தனியார் ஸ்கேன் மையங்களில் ரூ. 6,000 முதல் ரூ. 25 ஆயிரம் வரை வசூலிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *