தீபாவளியை முன்னிட்டு, ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க, நவம்பருக்கான பொருட்களை, இம்மாத இறுதிக்குள் அனுப்பும்படி, நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. இதை, இந்திய உணவுக் கழகம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து, நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்கிறது. குறித்த காலத்தில் சப்ளை செய்யாததால், ரேஷனில், பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
இந்நிலையில், உணவு வழங்கல் துறை இணை ஆணையர், நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குனருக்கு, அக்., 10ல் எழுதி உள்ள கடிதம்:நவம்பர், 6ல் தீபாவளி வருவதை முன்னிட்டு, இம்மாத ரேஷன் பொருட்கள் ஒதுக்கீட்டை, 15ம் தேதிக்குள், அனைத்து ரேஷன் கடைகளுக்கும், முழுவதும் சப்ளை செய்ய வேண்டும். நவம்பருக்கான பொருட்களை, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சிரமமின்றி பெற வசதியாக, வரும், 16ம் தேதி முதல், 31ம் தேதிக்குள், ரேஷன் கடைகளுக்கு முழுவதும் சப்ளை செய்ய வேண்டும்.
இதுகுறித்த, தினசரி அறிக்கையை, தினமும், காலை, 10:00 மணிக்குள், உணவு வழங்கல் துறை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.