தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறையின், தலைமை அலுவலகத்தில், நவம்பர் முதல், ‘இ-அலுவலக மேலாண்மை முறை’ நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து, தகவல் தொழில்நுட்பவியல் துறை அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தின் கீழ், அரசு அலுவலகங்களில், ‘இ – அலுவலக மேலாண்மை’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் கீழ், அலுவலக மேலாண்மை பணிகள் அனைத்தும், மின்னணு பரிவர்த்தனை வாயிலாக நடைபெறும். ஆவணங்கள் அனைத்தும், கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்து, மேலதிகாரிகளின் ஒப்புதலுக்காக அனுப்பப்படும்.இதன் வாயிலாக, காகிதம் பயன்படுத்தும் முறை, முற்றிலும் குறையும். ஆவணங்களில் மாற்றம் செய்தல், கடிதங்களில் திருத்தம் செய்தல் போன்ற பணிகளுக்காக, ஆவணங்களை திரும்ப அனுப்பும் நடவடிக்கைகள் குறையும். உயர் அதிகாரிகளே, இந்த பணியை செய்ய நேரிடும். ஒப்புதல் அளித்து, உயர் அதிகாரிகள் மின்னணு கையெழுத்து பதிவு செய்ததும், அரசுக்கு ஆவணங்கள் அனுப்பப்படும். இந்த முறை, தற்போது முன்னோட்டத்தில் உள்ளது. வரும் நவம்பர் முதல், செயல்பாட்டுக்கு வரும். தகவல் தொழில்நுட்பவியல் துறை செயலகம், அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம், ‘எல்காட்’ மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் ஆகியவற்றின் தலைமை அலுவலகங்களில், இ – அலுவலக மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.