ரயில்வே பாதுகாப்பு துறை உட்பட, மத்திய அரசு துறைகளின் கட்டுப் பாட்டில் உள்ள காலி நிலங்களில், ஏழை மக்களுக்கான குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும், ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், பிரதமரின் வீட்டுவசதி திட்டம், நான்கு பிரிவுகளாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில், குடிசை மாற்று வாரியம் எடுத்த கணக்கெடுப்பில், 13.91 லட்சம் குடும்பங்களுக்கு, முறையான வீட்டுவசதி தேவை என, தெரிய வந்து உள்ளது. இவர்கள் அனைவரும், பிரதமரின் வீட்டுவசதி திட்ட விதிமுறைகளின்படி, வீடுகள் பெற தகுதி பெற்றுள்ளனர். ஆனால், தற்போது வரை, 4.88 லட்சம் குடும்பங்களுக்கான வீடுகள் கட்டுவதற்கு மட்டுமே, மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. முட்டுக்கட்டைமற்ற குடும்பங்களுக்கு, வீடுகள் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆராயப்பட்டது. குடியிருப்புகள் கட்ட, குடிசை மாற்று வாரியம் வாயிலாக நிலம் கிடைப்பதில் ஏற்பட்டு உள்ள சிக்கலே, பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.
இதனால், மாவட்ட வாரியாக, தமிழக அரசின் பல்வேறு துறைகள் கட்டுப்பாட்டில் உள்ள காலி நிலங்கள் கண்டறியப்பட்டு, அவற்றை பெற, குடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் அடுத்தகட்டமாக, பாதுகாப்புத்துறை, ரயில்வே துறை கட்டுப்பாட்டில் உள்ள, காலி நிலங்கள் குறித்த தகவல்களும் திரட்டப்படுகின்றன.குத்தகைஇதுகுறித்து, குடிசை மாற்று வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தமிழகத்தில், பாதுகாப்புத் துறை, ரயில்வே துறை மற்றும் மத்திய பொதுத்துறை கட்டுப்பாட்டில், காலி நிலங்கள் உள்ளன. இந்த நிலங்களை, விலைக்கு அல்லது நீண்ட கால குத்தகைக்கு பெற்று, குடியிருப்பு திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பான விரிவான கருத்துரு, மத்திய அரசின் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட துறைகளை அணுகுவதற்கான வழிமுறைகளையும், ஆராய்ந்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.