சென்னை, ‘வடகிழக்கு பருவக்காற்று வீச துவங்கியுள்ளது; ஐந்து நாட்களில் மழை தீவிரமாகும்’ என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டின் முக்கிய மழை பருவமான, தென்மேற்கு பருவழை, அக்., 21ல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, வடகிழக்கு பருவமழை, இன்று துவங்குவதற்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே கணித்திருந்தது.இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர், பாலசந்திரன் நேற்று அளித்த பேட்டி:வானிலை ஆய்வு மையம் கணித்தபடி, வடகிழக்கு பருவமழைக்கான பருவக்காற்று வீச துவங்கியுள்ளது.
இந்த காற்று படிப்படியாக வலுப்பெற்று, ஐந்து நாட்களில், தமிழகம், புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில், பருவமழை தீவிரமாகும். தற்போது, மன்னார் வளைகுடா பகுதியில், மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகத்தின் தெற்கு கடலோர மாவட்டங்களில், சில இடங்களில், மிதமான மழை பெய்யும். வட மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசான மழைக்குவாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர்கூறினார். இதற்கிடையில், வடகிழக்கு பருவக்காற்று வலுப்பெற்று வருவதால், வங்க கடலின் மத்திய மேற்கு மற்றும் வடமேற்குபகுதியில், வரும், 29ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்.
இதனால், அன்று முதல், ஒடிசாவில்கனமழைக்கு வாய்ப்புள்ளது என, இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று காலை, 8:30 மணியுடன் முடிவடைந்த, 24 மணி நேரத்தில், தமிழகத்தில் அதிகபட்சமாக, திருச்செந்துாரில், 8 செ.மீ., மழை பெய்துள்ளது. துாத்துக்குடி, வேதாரண்யம், ஒட்டப்பிடாரம், 6; சாத்தான்குளம், குழித்துறை, சிவகாசி, தக்கலை, 3; பாளையங்கோட்டை, ராதாபுரம், நாங்குநேரி, இரணியம் மற்றும் திருபுவனத்தில், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.