சென்னை: வங்க கடலில் மையம் கொண்டிருக்கும், ‘கஜா’ புயல், நாளை இரவுக்குள் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வு தாமதமாகவும், திசை மாறி கொண்டும் இருப்பதால், வானிலை ஆய்வாளர்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
வங்க கடலில், நவ., 9ம் தேதி இரவு உருவான, கஜா புயல், தமிழகத்தை நோக்கி மிகவும் மெதுவாக சுழன்ற வண்ணம் உள்ளது. இந்த புயல் நேற்று, மேலும் வலுவாகும் என, கூறப்பட்ட நிலையில், நேற்றிரவு வரை, அதேநிலையில் தான் இருந்தது. புயல் நகரும் வேகம், மணிக்கு, 25 கி.மீ.,லிருந்து, 15 கி.மீ., ஆக குறைந்துள்ளது.
நேற்று முன்தினம், தென்மேற்கு திசையில் வேதாரண்யத்தை நோக்கி சுழன்ற புயல், நேற்று வடமேற்கு திசைக்கு மாறி காரைக்காலை நோக்கி சுழன்ற வண்ணம் உள்ளது. எனவே, கடலுார் மற்றும் பாம்பன் இடையே, எந்த இடத்தில் வேண்டுமானாலும், புயல் கரையை கடக்கலாம் என வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சென்னை வானிலை மைய துணை பொது இயக்குனர் பாலச்சந்திரன், ‘நாளை பிற்பகலில் புயல் கரையை கடக்கும்’ என தெரிவித்துள்ளார். அமெரிக்க புயல் எச்சரிக்கை மையம் மற்றும் தனியார் வானிலை ஆய்வாளர்களின் கணிப்புகளின் படி கஜா புயல் நாளை பிற்பகல் முதல் இரவுக்குள் கரையை கடக்கும்.