‘இன்னும் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும்’ என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விட்டு விட்டு பெய்கிறது. இந்தப் பருவ காலத்தில் தமிழகத்தில் இயல்பை விட 14 சதவீதமும் புதுச்சேரியில் 5 சதவீதம் குறைவாகவும் மழை பெய்துள்ளது. இந்நிலையில் ‘இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும். பருவ மழை தாக்கத்தால் சில இடங்களில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது’ என, வானிலை மையம் கணித்துள்ளது.
நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 8 செ.மீ., மழை பதிவானது. இதற்கிடையில் வங்க கடலில் நிலநடுக்கோடு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த இடத்திற்கு வடக்கே 9ம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் 14ம் தேதி புயல் சின்னம் அல்லது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகலாம் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.