தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறியவர்கள் டிச.11 முதல் சிறப்பு அனுமதித் திட்டத்தின் (தத்கல்) விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு கடந்த நவ.26-ஆம் தேதி முதல் டிச.5-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.

2019 ஜனவரி 1 அன்று பனிரெண்டரை வயது பூர்த்தி அடைந்த தனித் தேர்வர்கள் தத்கல் திட்டத்தின் மூலம் டிச.11, 12, 13 ஆகிய மூன்று நாள்களுக்கு மட்டும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு(Nodal Centre) சென்று ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, சிறப்புக் கட்டணம் ரூ.500, ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.675-ஐ தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலேயே நேரடியாகச் செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேர்வர்கள் டிச.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை சேவை மையங்களில் பதிவு செய்யலாம் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *