கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இதன் பலன்களை அறிந்து கொள்ளலாம்.
கரிசலாங்கண்ணி மூலிகை பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட சிறந்த மூலிகையாகும். இதை கரிசாலை என்றும் சொல்வார்கள். இந்த கரிசலாங்கண்ணி மூலிகையில் டீ, சூப் தயாரித்து சாப்பிடலாம். இதுதவிர கூந்தல் தைலம், மூலிகை பல்பொடி ஆகியவற்றையும் தயாரித்து விற்பனை செய்யலாம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம். இதை சிறிய அளவில் செய்ய நினைப்பவர்கள் தங்கள் பகுதியில் கடைகளுக்கு மட்டும் சப்ளை செய்யலாம் இதற்கு அதிக முதலீடு தேவையில்லை.
மறதி, ரத்தசோகை, இளநரை, கண் குறைபாடுகள், பல் நோய்கள், சளி, ஆஸ்துமா, காசநோய், நீரிழிவு, சிறுநீர்க்கோளாறுகள், ரத்த அழுத்தம், மது அடிமைத்தனம், புகையிலை பழக்கம், தோல் நோய்கள், மூலம், மாதவிடாய் கோளாறுகள், வெள்ளைப்படுதல், வெட்டை நோய், ஊளைச்சதை, கல்லீரல் சம்பந்தமான காமாலை நோய்கள், மஞ்சள் காமாலை, வறட்டு காமாலை, ஊதுகாமாலை, வெள்ளை காமாலை உள்பட பல நோய்களை கரிசலாங்கண்ணி மூலிகை குணப்படுத்தும். தங்கச்சத்து, இரும்பு சத்து, வைட்டமின் ‘ஏ’ ஆகிய மூன்றும் ஒரு சேர சேர்ந்த மூலிகை தான் இது. கரிசலாங்கண்ணி தூளை ஒரு நாளைக்கு 5 கிராம் என்ற அளவில் தேனுடன் கலந்து சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி கூடும். இதில் தங்கச்சத்து இருப்பதால், 6 மாதம் பயன்படுத்தினால் உடல் நிறம் தகதகவென்று மாறும்.
கரிசலாங்கண்ணியை பயன்படுத்தி எளிய முறையில் கூந்தல் தைலம் தயாரிக்கலாம். வாய் அகன்ற எவர்சில்வர் பாத்திரத்தில் அரை லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை எடுத்து ஊற்ற வேண்டும். அடுப்பில் வைத்து லேசாக தீயில் கொதிக்க விட வேண்டும். கொதி வரும்போது அதில் 50 கிராம் கரிசலாங்கண்ணி பவுடரை கொட்டி, கிளறி அடுப்பை அணைத்து விட வேண்டும்.
இரண்டு நாள் கழித்து இந்த எண்ணெயை வடிகட்டி உபயோகப்படுத்தலாம். பாட்டிலில் அடைத்தும் விற்பனை செய்யலாம். தேங்காய் எண்ணெயில் தயாரித்த இந்த கூந்தல் தைலத்தை, தினமும் தலையில் தடவி வந்தால், தலைமுடி கறு, கறு என்று இருக்கும். குளிக்கும் முன் உடல் முழுவதும் நல்லெண்ணெயை தேய்த்தால் பித்த வெடிப்புகள் மறைந்து விடும்.
மூலிகை கூந்தல் தைலம் தயாரிக்க, கரிசலாங்கண்ணி பொடி, எண்ணெய் கொதிக்க வைத்த கலவையில் இருந்து வடிகட்டி, எண்ணெயை வடிகட்டி எடுத்த பின், அடியில் உள்ள வண்டலுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, தலையில் தடவினால் முடி கறுத்த நிறமாக ஒரு மாதம் வரை இருக்கும்.
மெல்லிய வெள்ளை துணியில் கரிசலாங்கண்ணி பொடியை கட்டி, ஒரு பாத்திரத்தில் போட வேண்டும். அந்தத் துணி மூட்டை மூழ்கும் அளவுக்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி வெயிலில் காயவையுங்கள். எண்ணெய் கறுப்பு நிறமாக மாறும். இதைத்தொடர்ந்து தலையில் தடவி வர, இளநரை மாறி முடி கரு, கரு என்று இருக்கும்.
கரிசலாங்கண்ணி மூலிகையை காய வைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். மிளகு 2, ஏலக்காய் 1 இவற்றை பொடி செய்து, கால் தேக்கரண்டி கரிசலாங்கண்ணி பொடியுடன் கலந்தால் ஒரு கிளாஸ் டீத்தூள் ரெடி. மொத்தமாக தயாரிப்பவர்கள் இந்த அளவை மனதில் கொண்டு, டீத்தூள் தயாரிக்கலாம். இந்த பொடியுடன் தேவையான அளவு வெல்லம் சேர்த்து கொதிக்க வைத்தால் மூலிகை டீ தயார். விருப்பப்பட்டால் பால் சேர்த்து கொள்ளலாம். கரிசலாங்கண்ணி பொடியுடன் தூதுவளை பொடியையும் சேர்த்து மூலிகை டீ தயாரிக்கலாம்.
இந்த டீயை குடித்தால் வியாதி வராமல் தடுக்கும். பருவ காலங்களில் வரக்கூடிய தொற்று நோய்கள் அணுகாது. ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கரிசலாங்கண்ணி தூள் சிறிதளவு கலக்கவும். அதனுடன் மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைத்தால், சூப் ரெடி. இத்துடன் வெங்காயம், கறிவேப்பிலை, கொத்துமல்லி, தக்காளி சேர்த்தால் சுவையாக இருக்கும். கரிசலாங்கண்ணி பொடி 75 சதவீதம், கிராம்பு, கருவேலம்பட்டை, கடுக்காய், சுக்கு, வாய்விளங்கம், மாசிக்காய், ஆலம் விழுது, எலுமிச்சம் பழம், இந்துப்பு ஆகிய பொருட்களை சேர்த்து பொடி செய்தால், பல்பொடி தயார். இதை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யலாம். இந்த பல்பொடியை உபயோகித்தால் பல் நோய்களே வராது.
வறண்ட பகுதிகளிலும், தரிசு நிலங்களிலும் வளர்ந்து அதிக வருமானத்தை அளிக்கக்கூடிய மூலிகை பயிர்களில் நித்ய கல்யாணியும் ஒன்று. இந்த மூலிகை மருந்துக்காகவும், அலங்கார செடியாகவும் வளர்க்கப்படுகிறது. இதன் வேர்களை, இங்கிலாந்து, இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 2 ஆயிரம் டன் அளவுக்கு இறக்குமதி செய்கின்றன.
இதன் காய், வேர், இலை, பூ ஆகிய எல்லா பகுதிகளும் மருத்துவ குணம் உடையவை. ரத்த புற்றுநோயை குணப்படுத்தும் மூலிகை இது. உயர் ரத்த அழுத்த நோயை குணப்படுத்தவும் பயன்படுகிறது. இதன் வேர்க்கிழங்குகள் அதிக மருத்துவ குணம் கொண்டவை. ரத்த அழுத்தத்தை சீர்செய்ய பயன்படுகிறது. இதற்கு அதிக அளவில் தேவை இருந்து வருவதால், மார்க்கெட்டில் எப்போதும் இதற்கு கிராக்கி உண்டு.