சென்னை மாநகராட்சியில் கடந்த 2014-15 நிதியாண்டில் சொத்து வரி மற்றும் தொழில் வரியாக இதுவரை இல்லாத வகையில் ரூ. 846.61 கோடி வசூலிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் சொத்து வரியாக ரூ. 600 கோடி வசூல் செய்ய வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகவும், மாநகராட்சி அதிகாரிகள் எடுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கையால் ரூ. 581.82 கோடி சொத்து வரியாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த வசூல் தொகை சென்னை மாநகராட்சியின் வரலாற்றில் இதுவரை வசூலிக்கப்படாத தொகை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சொத்து வரி பாக்கி வைத்திருப்பவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் நேரடியாக சென்று வசூல் செய்வது, இணையதளம் மற்றும் வங்கிகள் மூலம் வசூல் செய்வது என பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் இவ்வாண்டு சொத்து வரி வசூலிக்கப்பட்டதாகவும் இனி ஒவ்வொரு ஆண்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இதே போன்ற அதிரடி வசூல் நடவடிக்கைகள் மூலம் சொத்து வரி மற்றும் தொழில் வரி வசூலிக்கப்படும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

இதேபோல கடந்த நிதியாண்டில் தொழில் வரியாக ரூ. 264.79 கோடி கிடைத்துள்ளது என்றும் சொத்து வரி மற்றும் தொழில் வரி என இரண்டும் சேர்த்து சென்னை மாநகராட்சிக்கு மொத்தம் வரி வருவாயாக ரூ. 846.61 கோடி கிடைத்துள்ளதாகவும் மாநகராட்சி செய்தி குறிப்பு ஒன்று கூறுகிறது.

கடந்த 2012-13-ஆம் நிதியாண்டில் சொத்து வரியாக ரூ. 461.10 கோடியும், 2013-14-ஆம் ஆண்டில் ரூ. 480.13 கோடியும் வசூலிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.