தென் கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று (07.12.2022) நள்ளிரவு புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு “மாண்டஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயல் காரணமாக, டிசம்பர் 10-ம் தேதி வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும். நாளை (09.12.2022) காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவையின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
மாண்டஸ் புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 550 கி.மீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கில் சுமார் 460 கி.மீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இதுதொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி, டிசம்பர் 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையைக் கடக்கக் கூடும். இதன் காரணமாக 8, 9, 10 தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும்.
இதனால், டிசம்பர் 8 ஆம் தேதி (வியாழக்கிழமை) டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
தென் தமிழக கடற்கரை மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்,
வியாழன்று சூறைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் என்ற வேகத்தில் சமயங்களில் 60 கி.மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
வெள்ளிக்கிழமையன்று மணிக்கு 50 முதல் 60 கி.மீட்டர் வேகத்திலும், சமயங்களில் 70 கி.மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வரும் 10-ம் தேதி வரை, தமிழகத்தை ஒட்டியுள்ள கடல் கொந்தளிப்புடன் காணப்படும். எனவே மீனவர்கள் 10-ம் தேதி வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்று புறநகரைப் பொருத்தவரை அடுத்து வரும் இரு தினங்களுக்கு கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறியுள்ளார்.