சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிவேகமாக உயர்ந்ததால், வாங்குவதற்கு ஆளின்றி அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
புயல் கரையை கடந்தாலும் சென்னையில் தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருக்கிறது. வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் கனமழை பெய்தும் வருகிறது. தொடர் மழை காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் காய்கறி வரத்து பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதன் தாக்கம் காய்கறி விலையில் எதிரொலித்துள்ளது. இதனால் காய்கறி விலை ஓரிரு நாளிலேயே ‘கிடுகிடு’வென உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக 2 நாட்களுக்கு முன்பு ரூ.20 வரை விற்பனையான ஒரு கிலோ பீன்ஸ், அவரை உள்ளிட்ட காய்கறி தற்போது ரூ.30 முதல் ரூ.35 வரை விற்பனை ஆகிறது. பாகற்காய், கத்தரி, பீர்க்கங்காய் உள்ளிட்டவற்றின் விலை ரூ.10 அதிகரித்துள்ளது.
தக்காளி விலையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது. ரூ.12 முதல் ரூ.17 வரை விற்பனையான தக்காளி, தற்போது ரூ.30 வரை விற்பனை ஆகிறது. முருங்கைக்காய் விலையும் ரூ.30 வரை உயர்ந்திருக்கிறது. தற்போது மழை குறைந்திருப்பதால் விலை சற்று மீண்டு வருகிறது.
நிலைமை சீரடையும் பட்சத்தில் காய்கறி விலை ஓரிரு நாளில் குறைந்து முன்புபோலவே விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை மழை காரணமாக மார்க்கெட்டுக்கு மக்கள் வருகை கணிசமாக குறைந்திருப்பதால், வாங்க ஆளில்லாமல் காய்கறி வீணாகி அழுகி போய் குப்பையில் கொட்டும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது.