தற்போது வேலை தேடி வரும் பட்டதாரிகளுக்கு உதவிடும் வகையில் தனியார் துறையில் தகுதியான வேலைகளை பெறுவதற்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் ஒன்று வரும் ஏப்ரல் 11-ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ. சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு ஒன்றில் கூறியிருப்பதாவது: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள செட்டிநாடு வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளியில் வரும் 11-ஆம் தேதி சனிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றும், இந்த முகாமில் தனியார் நிறுவனங்களில் உள்ள காலியிடங்களுக்கு தகுதியின் அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக கணினி இயக்குநர், இளநிலை செயல் அதிகாரி, வரவேற்பாளர், வாய்ஸ், நான் வாய்ஸ் புராஸஸர்ஸ், தொழில்நுட்ப உதவியாளர் ஆகிய பல்வேறு பணிக்கான நேர்காணல் இந்த முகாமில் நடைபெறும் என்றும் இதில் 8ஆம் வகுப்பு முதல் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை கலந்து கொண்டு தங்கள் தகுதிக்கேற்ற வேலைவாய்ப்பை பெற்று கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஐடிஐ, பட்டயப் படிப்பு படித்தவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என்றும் இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் பயோடேட்டாவுடன் வரும் 11ஆம் தேதி நேரில் வரவேண்டும் என்று ஆட்சி தலைவர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
English Summary: Private Organisations Job Fair is going to be held on April-11 in Chennai.