யுபிஐ-லைட் வாலட் பயன்பாட்டை ஊக்குவிக்க ஆஃப்லைன் கட்டண பரிவர்த்தனையின் உச்ச வரம்பை தற்போதுள்ள ரூ.200-லிருந்து ரூ.500 ஆக ரிசர்வ் வங்கி நேற்று உயர்த்தியது. இருப்பினும், கட்டணம் செலுத்தும் கருவியில் ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கான மொத்த வரம்பு ரூ.2,000 ஆக உள்ளது என தெரிவித்தது.
ஆஃப்லைன் கட்டண பரிவர்த்தனையின் உச்ச வரம்பு ரூ.500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. யுபிஐ-யில் சிறிய மதிப்புள்ள பரிவர்த்தனைகளின் வேகத்தை அதிகரிக்கவும், பரிவர்த்தனை நடைபெறும் போது தோல்விகளைக் குறைக்கவும் யுபிஐ-லைட் வாலட் 2022 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இது தற்போது மாதத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளை செயலாக்குகிறது.
இந்த மாத தொடக்கத்தில், யுபிஐ-லைட் பயன்பாட்டை ஊக்குவிக்க நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஃப்லைன் பரிவர்த்தனைகளை எளிதாக்க ரிசர்வ் வங்கி முன்மொழிந்தது. நியர் ஃபீல்ட் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் பரிவர்த்தனைகளுக்கு பின் சரிபார்ப்பு தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.