தமிழகத்தில் திருச்சி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், செப்டம்பர் 1-ம் தேதியும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆகஸ்ட் 30, 31 மற்றும் செப்டம்பர் 3, 4-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்சவெப்பநிலை 99 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 79 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டியிருக்கும்.
ஆகஸ்ட் 28-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 9 செ.மீ.,மூங்கில்துறையில் 8 செ.மீ.,விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் 7 செ.மீ., திண்டிவனம், கள்ளக்குறிச்சி மாவட்டம் கலயநல்லூர் ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.