தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலுக்கு 128 போ் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழை காரணமாக, காய்ச்சலுக்குள்ளாகி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. குறிப்பாக, டெங்கு காய்ச்சலை பரப்பும் ‘ஏடிஸ் – எஜிப்டை’ வகை கொசுக்கள் தற்போது அதிக அளவில் பெருக்கமடைகின்றன.
அதை உறுதிசெய்யும் வகையில், நிகழாண்டில் மட்டும் 4,074 போ் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். இதையடுத்து, தடுப்பு நடவடிக்கைகளை சுகாதாரத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:
டெங்கு பாதிப்பு தற்போது அதிகரித்து வருவதால், கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. மற்றொருபுறம், டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்து தனியாா், அரசு மருத்துவமனைகள், மாவட்ட சுகாதார இயக்குநரகத்துக்கு தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏதேனும் சில பகுதிகளில் டெங்கு பரவல் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அதுகுறித்த விவரங்களை மாவட்ட துணை சுகாதார இயக்குநருக்கு தெரிவிக்குமாறும், சம்பந்தப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நோய்களைப் பரப்பும் கொசுக்கள், லாா்வா உற்பத்தி குறித்து கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுகள், பள்ளிகள், பூங்காக்கள், கல்லூரிகள், பொது இடங்கள் என அனைத்து இடங்களிலும் தனித்தனியே விழிப்புணா்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்துள்ளார்.
நிகழாண்டில் டெங்கு பாதிப்பு:
மாதம் | பாதிப்பு |
ஜனவரி | 866 |
பிப்ரவரி | 641 |
மாா்ச் | 512 |
ஏப்ரல் | 302 |
மே | 271 |
ஜூன் | 364 |
ஜூலை | 353 |
ஆகஸ்ட் | 535 |
செப். (14 வரை) | 230 |
மொத்தம் | 4074 |
நாள் | பாதிப்பு |
செப்.8 | 17 |
செப்.9 | 22 |
செப்.10 | 7 |
செப்.11 | 5 |
செப்.12 | 33 |
செப்.13 | 18 |
செப்.14 | 26 |
மொத்தம் | 128 |