வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்றதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஞாயிற்றுக்கிழமை காலை புயலாக வலுப்பெற்றது. ‘மிக்ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள புயல் சென்னைக்கு தென் கிழக்கே சுமாா் 90 கி.மீ. தொலைவில் தற்போது நிலைகொண்டுள்ளது.
இந்தப் புயல் செவ்வாய்க்கிழமை காலை ஆந்திரம் அருகே கரையைக் கடக்கவுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகின்றது.
இந்நிலையில், மிக்ஜாம் புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.